×

புனித வெள்ளி, ஈஸ்டர், சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து அதிகாரிகள் முடிவு

சென்னை:  அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன. இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக அரசு விடுமுறையும், தொடர்ந்து 16 (சனி), 17 (ஞாயிறு) ஆகிய விடுமுறை தொடர்ந்து வருவதால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாகும்.

ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயண தேவை அதிகரிக்கும் என்று எதர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி 13-ந் தேதி கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. 16-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக்கருதி 1000 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 13-ந் தேதி வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் 500 பஸ்களும், 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி என்பதால் அன்று 500 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சேவை இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.சிறப்பு பஸ்கள் விழுப்புரம், சேலம், வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், நெய்வேலி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

Tags : Chennai ,Good Friday ,Easter ,Chitra Pavurnami , 1000 special buses from Chennai on Good Friday, Easter and Chitra Pavurnami: Transport officials
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...